வாழ்வில் நிம்மதியற்று வாழ்கின்றாயா இது உனக்கான கதை - Positive energy story in tamil

Positive energy story in tamil
Positive energy story in tamil

பல வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் ஒரு மிகப் பெரும் தொழிலதிபர் வாழ்ந்து வந்தார். அவருக்குச் சொந்தமாக பல தொழிற்சாலைகள் இருந்தன சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள். அந்த மாநிலத்திலேயே அதிகம் செல்வம் படைத்தவர் வயதோ அறுபது கடந்துவிட்டது. ஒருநாள் தனது தொழில் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற விரும்பினார் அந்த செல்வந்தர். குழந்தைகளை அழைத்து தனது வணிகத்தை அவர்களது கையில் கொடுத்துவிட்டு அந்த நகரத்தில் இருந்து பல மைல் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில் ஆற்றங்கரை ஓரமாக ஒரு நிலத்தை வாங்கி அதில் தனக்கு பிடித்தவாறு ஒரு மிகப்பெரும் பங்களாவைக் கட்டி அவரும் அவரது மனைவியும் குடியேறினார்கள். அங்கு இவர்களை கவனிக்க பத்திற்கும் மேற்பட்ட வேலை ஆட்களை நியமித்து எவ்வித கஷ்டமும் அற்ற ராஜபோக வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். ஒரு நாள் காலை பொழுதில் தனது பங்களாவில் இருந்து வெளிவரும் அருகிலுள்ள குளக்கரை ஓரமாக இயற்கையை ரசித்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தார் அந்த செல்வந்தர். 



அப்போது அவரது கண்களில் அங்கிருந்த மரநிழலில் கட்டப்பட்ட ஒரு படகு தென்பட்டது. அப்படகில் உள்ளே ஒரு இளைஞன் உறங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் அவன் ஒரு மீனவன் என்பதையும் இது அவனது படகுதான் என்பதையும் உணர்ந்து கொண்ட அந்த செல்வந்தர். உடலில் சக்தி இருக்கும் இந்த இளமை காலத்தில் கடினமாக உழைத்தும் முன்னேறாமல் காலை பொழுதிலேயே இப்படி சோம்பேறியாக உறங்குகின்றன இவன் எத்தனை பெரியதொரு முட்டாளாக இருப்பான் என எண்ணி வியந்து போனார். அருகில் சென்று அவனை தட்டி எழுப்பி உடலில் வலு இருக்கும் இளைஞனாக இருந்துகொண்டு ஏன் இப்படி காலை வேளையிலேயே உறங்கிக் கொண்டிருக்கிறாயே எனக் கேட்டார் ? அதற்கு அந்த இளைஞன் ஐயா நள்ளிரவில் மீன் பிடிப்பது எனது பழக்கம் இரவு முழுவதும் மீன்களைப் பிடித்து விட்டு காலையில் கரைக்கு வந்து சிறிது நேரம் இந்த மர நிழலில் உறங்குவேன். அதன் பின்னர் இம்மீன்களை சந்தையில் விற்றுவிட்டு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வீடு சென்று விடுவேன் எனக் கூறினான். அதற்கு அந்த செல்வந்தர் உன் பகல் நேரத்தை எவ்வாறு செலவு செய்வாய் என கேட்டார். 

அதற்கு அவன் வீடு சென்றதும் நன்றாக உறங்கினேன் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வேன் இந்த ஊரில் ஏதாவது கேளிக்கை நிகழ்வுகள் நடந்தால் அவற்றை பார்க்கச் சென்று விடுவேன் எனக் கூறினான். இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்து அச் செல்வந்தர் உனது இளமைக்காலத்தை ஏன் இவ்வாறு வீன் அடிக்கின்றாய் இதற்கு பதிலாக பகல் நேரமும் மீன்பிடிக்கச் செல்லலாமே என கேட்டார். இதைக் கேட்டு அந்த இளைஞன் தினமும் நான் சம்பாதிக்கும் பணம் எனது குடும்பத்திற்கு போதுமாக உள்ளதே இதற்கு மேல் நான் ஏன் சம்பாதிக்க வேண்டும் என அப்பாவியாக கேட்டான். அதற்கு அந்த செல்வந்தர் நீ தேவைக்கு அதிக பணத்தை சம்பாதித்தால் உன்னிடம் ஒரு சேமிப்பு எஞ்சும் அதை வைத்து ஒரு புதிய மோட்டாரை வாங்கி இக்குளத்தின் ஆழமான பகுதியில் சென்று அதிக மீன்களை பிடிக்கலாம். அதன்பின் உன்னிடம் மேலும் அதிக பணம் சேர்ந்து விடும் அதை வைத்து ஒரு தரமான வலையை வாங்கி மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம். அதன் பின் மேலும் பல நவீன படகுகளை வாங்கி ஆட்களை வேலைக்கு அமர்த்தி இந்தக் குளம் எங்கும் மீன் பிடிக்கலாம். அதன் பின்னர் நீயும் என்னைப்போல ஒரு மிகப் பெரும் தொழிலதிபர் ஆகிவிடுவாய். 

இறுதியில் இந்த ஆற்றங்கரையோரம் ஒரு வீட்டை வாங்கி இங்கேயே உனது வாழ்க்கையை இங்கே நிம்மதியாகக் கழிக்கலாம் எனக் கூறி முடித்தார். இவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞன் ஐயா இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என நீங்கள் எண்ணுகிறீர்கள் என கேட்டான். அக்கேள்வி அச் செல்வந்தரை தூக்கிவாரிப்போட்டது. அக்கணமே இவரது இறந்தகாலம் கண் முன்னே தோன்ற ஆரம்பித்தது. நம் இளமைக்காலம் முழுவதும் பணம் சம்பாதிப்பதிலேயே கழித்தோம். குடும்பத்துடன் நேரம் செலவு செய்யவில்லை. குழந்தைகள் வளரும் போது அவர்கள் அருகில் இருந்த தில்லை. 

இந்த 60 வருடத்தில் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்து விட்டோம். உலகின் பல நாடுகளை பார்த்து விட்டோம். ஆனால் நம் மனதிற்கு நிம்மதியை தந்ததோ இன்று இந்த ஆற்றங் கரையோரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை தான். இதை வாழ்க்கையை தானே இந்த மீனவனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 60 வருடங்கள் கடந்து வாழ்வின் இத்தனை போராட்டங்களையும் பார்த்த பின்னர் என்னுள் தோன்றிய இந்த ஞானம் இத்தனை சிறிய வயதில் இந்த மீனவன் இடம் இருக்கின்றதே எனில் இதில் யார் உண்மையிலேயே அறிவாளி என்ற கேள்வியை தன்னுள் கேட்டவாறு அவ்விளைஞன் நோக்கிய ஒரு புன்னகையுடன் தனது இருப்பிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இவ்வாழ்க்கை அழகியதொரு பயணமாகும் இதை ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப வாழ்கின்றனர். என்று ஒருவன் அடுத்தவனின் தேவைக்கு ஏற்ப வாழ ஆரம்பிக்கின்றாநோ அவனால் நிச்சயம் இந்த வாழ்க்கையை திருப்தியோடு வாழ முடியாது. வாழ்வில் உங்களுக்கு எத்தனை பெரிய கனவு இருந்தாலும் அதில் நீங்கள் எத்தனை கோடிகள் சம்பாதிக்க விரும்பினாலும் என்றும் உங்களது கனவுகளும் அதற்கான உழைப்பும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை சிதைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒன்றை மறந்துவிடாதீர்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்காமல் ஒரு ஓட்டப்பந்தய குதிரையைப் போல தன் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நிச்சயம் இறுதியில் ஒரு ஏமாற்றமாகவே நிறைவேறும்.


நன்றி

No comments:

Post a Comment